37 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

37 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

தொடர்ச்சியான பலத்த மழைக்குப் பின்னர், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை 494 இடங்களை ஆய்வு செய்து முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

மேலும் 2198 இடங்களை ஆய்வு செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. 

இதற்கிடையில், பலத்த மழை ஓய்ந்த போதிலும், 4 மாவட்டங்களில் உள்ள 37 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தொடர்ந்து மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மண் அதிக ஈரப்பதனுடன் இருப்பதாலும் தற்போது வடகிழக்கு பருவமழை அதிகரித்திருப்பதாலும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கைகள் தொடர்ந்து விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டது. 

நேற்று காலையில் கூட மீகஹகிவுல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 

மண்சரிவின் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் பதுளை மாவட்டத்தில் பல குடும்பங்கள் அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது. 

எஸ். ரஜீவன்