34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம்!
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் இடம்பெற்ற அரசாங்க நிலை அளவையாளர் திணைக்கள சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இதற்காகக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் ஏற்படும் பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொள்வதற்குப் போதுமான அளவிலான ரூபாய்கள் கைவசம் உள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இருப்பினும் வெளிவாரி அதிர்ச்சியொன்றை எதிர்கொள்ளும் அளவுக்குப் பொருளாதாரம் வலுவாக இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
திறைசேரிக்கு கிடைக்கும் செல்வத்தை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியை அரச சேவையே செய்ய வேண்டும்.
அதற்கு வலுவான அரச இயந்திரம் அவசியம் என்றும், தற்போதைய அரசாங்கம் அதை உறுதியாக நம்புவதாகவும் ஜனாதிபதி கூறினார்.
இருப்பினும், நாட்டின் அரச சேவை ஈர்க்கக்கூடியதாக இல்லாததால், பலரும் அதனை விட்டு விலகிச் செல்வதாகவும், தொழில் வல்லுநர்களைத் தக்கவைத்துக்கொள்ளக்கூடிய அரச சேவை நாட்டில் உருவாக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய கடினமான பின்னணியில் அடிப்படைச் சம்பளத்தை உயர்த்தத் தீர்மானிக்கப்பட்டதுடன், 2027ஆம் ஆண்டில் சம்பளத்தை அதிகரிப்பதற்கு 110 பில்லியன் ரூபா தேவைப்படுவதால், இந்த வரவு செலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி அங்கு வலியுறுத்தினார்.
2028ஆம் ஆண்டில் கொடுப்பனவுகளை வழங்குவது குறித்துப் பெருமளவில் கவனம் செலுத்தப்படும் என்றும், அந்த ஆண்டில் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், அரச சேவையில் ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கு அத்தியாவசியமான கொடுப்பனவுகள் குறித்துக் கவனம் செலுத்தப்படும்.
தொழில்முறை அரச சேவையில் பல வெற்றிடங்கள் நிலவும் அதேவேளை, கடந்த காலத்தில் வழங்கப்பட்ட அரசியல் நியமனங்கள் காரணமாக கீழ்மட்டப் பதவிகள் நிரம்பி வழிகின்றன என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
எனவே, சில அரச நிறுவனங்களை மூடுவதற்கும், சிலவற்றை ஒருங்கிணைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிதி அமைச்சினால் 34 அரச நிறுவனங்களை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காகக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “ஆனால் நடந்துள்ளது என்னவென்றால், தொழில்முறை அரச சேவையில் பாரிய வெற்றிடங்கள் நிலவும் அதேவேளை, கடந்த காலத்தில் அரசியல் நியமனங்கள் காரணமாக கீழ்மட்டப் பதவிகள் பெருமளவில் நிரம்பியுள்ளன.
அதனால் நாங்கள் ஒரு சிறிய முடிவை எடுத்தோம். அரச சேவை அத்தியாவசியமானதுதான். ஆனால் அந்தச் சேவையை வழங்குவதற்காக நாம் செலவிடும் தொகை அதிகம். அதனால் சில நிறுவனங்களை மூடுவதற்கும், சில நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்கும் தீர்மானித்துள்ளோம். தற்போது நிதி அமைச்சினூடாக 34 நிறுவனங்களை மூடுவது தொடர்பில் தீர்மானம் எடுத்துள்ளோம். மூடுவதற்காகக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. ஒன்றை மூடினால் கொடுப்பனவு கொடுக்க வேண்டியுள்ளது. மூடுவதும் மிகவும் கடினமானது, ஏனெனில் இவை மிகவும் சிக்கலானவை. சில நிறுவனங்கள் ஏன் உருவாக்கப்பட்டன? சில நிறுவனங்கள் உருவாக்கப்பட்ட காலத்தை விட இப்போது காலம் மாறியுள்ளது.
அன்று இருந்த தேவை இன்று இல்லை. அன்று சில துறைகளில் அரச துறை மட்டுமே இருந்தது. ஆனால் இன்று வெளியே பெரிய தனியார் துறை உள்ளது. அப்படியிருக்க அவற்றை நாமே செய்ய வேண்டுமா? அல்லது அவற்றை நாம் விட்டுவிட முடியுமா? தனியாரிடமிருந்து சேவைகளைப் பெறுவது நமக்கு இலாபகரமானதா? தொழில் வல்லுநர்களை நாம் எவ்வாறு அரச சேவையில் இணைத்துக்கொள்வது? தொழில் வல்லுநர்களுக்கு ஈர்ப்புடையதாக இந்த அரச சேவையை எவ்வாறு மாற்றுவது? இல்லையெனில், நமது அரச சேவை பாரிய நெருக்கடியைச் சந்திக்கும் என்று நான் நினைக்கிறேன்.” என்றார்.

