ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீழ்ச்சியடைய அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது!
ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீழ்ச்சியடைய அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வாவின் பதவிக் காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட ஹேஷா விதானகே, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் புதிய நடவடிக்கைகள் என்னவெனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த விளையாட்டுத்துறை அமைச்சர், கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்கும், எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகளை அடைவதற்கும் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டை மறுசீரமைத்து, அதன் தரத்தை மேம்படுத்துவதற்கான சட்டமூலம் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது விவாதம் மற்றும் அங்கீகாரத்துக்காகக் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் தேவைப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், முன்மொழியப்பட்டுள்ள மறுசீரமைப்புகள் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்த உதவும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முந்தைய அரசாங்கங்களும் இத்தகைய மறுசீரமைப்பு முயற்சிகளை முன்னெடுத்தபோதிலும், பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியின் ஆதரவுடனும் இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
“கிரிக்கெட் விளையாட்டு முடிவுக்கு வருவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். விளையாட்டை மறுசீரமைத்து மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்” எனவும் அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.

