விலைகளைக் காட்சிப்படுத்தாத வர்த்தக நிலையங்களுக்கு எதிராக விசேட சுற்றிவளைப்புகள்
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் 2026 ஒக்டோபர் 20 முதல் 24 வரையான காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு மாவட்டங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் சந்தை விசாரணைகளின்போது, பொருட்களின் விலைகளைக் காட்சிப்படுத்தத் தவறியமை உள்ளிட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட மீறல்கள் தொடர்பாக சுமார் 200 சுற்றிவளைப்புகள் பதிவாகியுள்ளன.
பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்னர் அவற்றின் விலைகளை நுகர்வோர் தெளிவாக அறிந்துகொள்வதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்துதல், சந்தையில் விலை வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளைத் தடுப்பதே இவ்விசேட வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.
இவ்வேலைத்திட்டத்தின் கீழ் அரிசி, சீனி, பருப்பு, மரக்கறிகள், பழங்கள், கோதுமை மா, பேக்கரி உற்பத்திகள், சிற்றுண்டிகள், ஆடைகள், மின்சார உபகரணங்கள், கையடக்கத் தொலைபேசி உதிரிப்பாகங்கள் மற்றும் ஏனைய நுகர்வுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு, அனுராதபுரம், குருநாகல், புத்தளம், கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, மொனராகலை, திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக, அரிசி, சீனி, பருப்பு, மரக்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் காட்சிப்படுத்தத் தவறிய பல சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இச்சம்பவங்களுடன் தொடர்புடைய வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சில வழக்குகளை நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்வதற்கான திகதிகளும் குறிப்பிடப்பட்டுள்ளதாக மாவட்ட அலுவலகங்கள் அறிக்கையிட்டுள்ளன.
இவ்வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில் கோதுமை மா விற்பனை, சந்தையில் கையிருப்பிலுள்ள தொகைகள், விலைக் காட்சிப்படுத்தல் மற்றும் தொடர்புடைய சட்டத் தேவைகளைப் பின்பற்றுதல் ஆகியவை குறித்தும் விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விலைகளைக் காட்சிப்படுத்தத் தவறியமை மற்றும் ஏனைய சட்ட மீறல்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விலைகளைக் காட்சிப்படுத்துவது வர்த்தகர்களின் சட்டபூர்வக் கடமையாகும். 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் 26(1) ஆம் பிரிவின்படி, பொருட்களிலோ அவற்றின் பொதிகளிலோ சட்டத்திற்கு அமைவாக விலை குறிப்பிடப்படாத சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்ட பொருட்களின் விலைகளை நுகர்வோர் தெளிவாகக் காணக்கூடிய வகையில் வர்த்தக நிலையத்தினுள் காட்சிப்படுத்துவது வர்த்தகர்களின் கடமையாகும்.
பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்னர் அவற்றின் விலைகளை அறிந்துகொள்ள நுகர்வோருக்கு வாய்ப்பளிப்பது நியாயமானதும் வெளிப்படைத்தன்மையுள்ளதுமான சந்தையைப் பேணுவதற்கு மிகவும் அவசியமாகும். எனவே, விலைகளைக் காட்சிப்படுத்துதல் உள்ளிட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை முறையாகப் பின்பற்றுமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அனைத்து வர்த்தகர்களையும் வலியுறுத்துகிறது.
பொருட்களின் விலைகள் காட்சிப்படுத்தப்படாமை அல்லது ஏனைய நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பாகத் தகவல்கள் இருப்பின், அவற்றை நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

