வலிந்து காணாமலாக்கப்பட்ட குடும்பங்களுக்கான கொடுப்பனவுவழங்கி, குறை நிறை கேட்ட அமைச்சர்

வலிந்து காணாமலாக்கப்பட்ட குடும்பங்களுக்கான கொடுப்பனவுவழங்கி, குறை நிறை கேட்ட அமைச்சர்
  • வீடுகளுக்கு சென்ற அமைச்சர் ஹர்ஷன, இளங்குமரன் எம்.பி

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காணாமல் போனவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கான புனர்வாழ்வு கொடுப்பனவை வழங்கவும், குடும்பங்களின் நலன் குறித்து கேட்டறியவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன் ஒரு கட்டமாக, கிளிநொச்சி இரணைமடு வீதி, கனகாம்பிகைக்குளம் பகுதியில் காணாமல் போன குடும்பமொன்றுக்கு புனர்வாழ்வு கொடுப்பனவை வழங்குவதற்கான காசோலைகள் இன்று (25) காலை அமைச்சரின் தலைமையில் வழங்கப்பட்டன.

குறித்த குடும்பத்தைச் சேர்ந்த ஷண்முகம் என்பவரின் இரு மகள்கள் 2009ஆம் ஆண்டு காணாமல் போயிருந்த நிலையில், அவர்களின் குடும்பத்துக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டது.

இதன்போது குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் கலந்துரையாடினார்.

காணாமல் போனவர்களின் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அவர்களுக்கு பொருளாதார ரீதியான ஆதரவை வழங்கும் நோக்கில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினால் இந்தப் புனர்வாழ்வு கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், காணாமல் போனவர்கள் தொடர்பாக மேலும் சுமார் 11,000 முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட வேண்டியுள்ளதாகவும், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்யப்பட வேண்டிய சுமார் 200 முறைப்பாடுகளின் விசாரணைகள் இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் செயற்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை காணப்பட்டதாகவும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அந்த அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், இதுவரை முறைப்பாடு செய்யாத காணாமல் போனவர்களின் குடும்பங்கள், தங்களுக்கு உள்ள தகவல்களின் அடிப்படையில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

காணாமல் போன குடும்பங்களை நேரடியாக அவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்தித்து, அவர்களுக்கான புனர்வாழ்வு கொடுப்பனவை வழங்கி, நலன் விசாரித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

manel