மக்களால் புறக்கணிக்கப்பட்ட மலையகத் தலைவர்கள் ஊழல்வாதிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றனர் – பிரதி அமைச்சர் பிரதீப் சாடல்

மக்களால் புறக்கணிக்கப்பட்ட மலையகத் தலைவர்கள் ஊழல்வாதிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றனர் – பிரதி அமைச்சர் பிரதீப் சாடல்

மலையக மக்களால் புறக்கணிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்ட அரசியல் தலைவர்கள், இன்று ஊழல்வாதிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதுடன் நாமலைப் பாதுகாக்க முற்படுவதன் மூலம், கடந்த கால அரசாங்கத்தின் ஊழல் செயற்பாடுகளில் அவர்களுக்கும் பங்கு இருப்பது தெளிவாகிறது என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் இருந்த சட்டரீதியான நிலுவைப் பணத்தை வழங்கும் நிகழ்வு கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:

“இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தொழிலாளர்களின் அரசாங்கத்தை நாம் உருவாக்கியிருக்கிறோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்பது சாதாரணமான ஒரு அரசாங்கம் அல்ல. இந்த நாட்டின் தொழிலாளர்களைப் பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் உருவாக்கப்பட்ட அரசாங்கமாகும்.

இந்த அரசாங்கத்தில் தான் மலையக மக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு, எமக்கு உரிய சமூக அந்தஸ்தும் கிடைத்து வருகிறது.

‘இந்த அரசாங்கம் என்ன செய்தது?’ என சிலர் கேட்கிறார்கள். நீங்கள் செய்ததைப் போன்ற ஊழலையோ, மக்களுக்கு எதிரான அட்டூழியங்களையோ நாங்கள் செய்யவில்லை. நாங்கள் நாட்டின் உண்மையான அபிவிருத்திக்காகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள் செய்த அநியாயங்களை நாங்கள் பட்டியலிடத் தொடங்கினால் அதற்கு நேரமே போதாது. ஏனெனில், கடந்த காலங்களில் நாட்டில் நடைபெற்ற அனைத்து ஊழல், திருட்டு மற்றும் அநியாயங்களில் உங்களுக்கும் கணிசமான பங்கு உண்டு. கடந்த அரசாங்கங்களில் நீங்கள் அமைச்சர்களாகவும் பங்காளிகளாகவும் இருந்தவர்களே!

எனவே, உங்களால் ஊடகங்களுக்கு முன்பாக மட்டுமே பேச முடியும். தைரியமிருந்தால் மக்கள் முன்பாகச் சென்று பேசிப் பாருங்கள், மக்கள் உங்களுக்குத் தகுந்த பதிலைக் கொடுப்பார்கள்.”

manel