பல மில்லியன் பார்வைகளை ஈர்க்கும் முன்னணி மாணவர் ஊடக நிறுவனமாக வளர்ந்த புனித பேதுரு கல்லூரி ‘பீட்டரைட் மீடியா’

சாதாரண புகைப்படக் கழகத்திலிருந்து பல மில்லியன் பார்வைகளை ஈர்க்கும் முன்னணி மாணவர் ஊடக நிறுவனமாக வளர்ந்த புனித பேதுரு கல்லூரி ‘பீட்டரைட் மீடியா’ கொழும்பு.
பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரியின் ஊடகப் பிரிவான ‘பீட்டரைட் மீடியா’ (Peterite Media), சாதாரண புகைப்படக் கழகமாகத் தொடங்கி இன்று பல மில்லியன் பார்வைகளை ஈர்க்கும் பல்துறை மாணவர் ஊடக நிறுவனமாக உருவெடுத்துள்ளதுடன், அதன் சேவைகளுக்குக் கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் சமூகத்திடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அருட்தந்தை பெலிசியன் ரஞ்சித் அவர்களின் காலத்தில் புகைப்படக் கழகமாக ஆரம்பிக்கப்பட்ட இப்பிரிவு, 2021-ஆம் ஆண்டில் முன்னாள் சந்தைப்படுத்தல் பொறுப்பாளர் திரு.
மந்திக பெரேரா அவர்களின் தொலைநோக்குப் பார்வையால் ‘பீட்டரைட் மீடியா’ என மறுபெயரிடப்பட்டு, ‘CLICK. LIVE. CREATE.’ என்ற அடையாளத்துடன் புத்துயிர் பெற்றது. 2023 முதல் புகைப்படம், காணொளி, நேரடி ஒளிபரப்பு, மக்கள் தொடர்பு, தலையங்கம், தொகுப்புரை, ஒலி அமைப்பு, தளவாடங்கள் மற்றும் ட்ரோன் குழு எனப் பல்துறைக் கட்டமைப்பாக விரிவடைந்தது.
பொருளாதார நெருக்கடி மற்றும் மின்வெட்டுச் சவால்களைத் தாண்டி மீண்டெழுந்த இப்பிரிவு, கல்லூரியின் நூற்றாண்டு விழா, ‘பாவா – 2024’ மற்றும் ‘கலர்ஸ் நைட் – 2025’ (115 எல்.ஈ.டி காணொளிகள் மற்றும் ஆவணப்படம்) ஆகியவற்றின் ஊடகப் பணிகளை மாணவர்களே முன்னெடுத்ததன் மூலம் கல்லூரிக்குப் பெருமளவு செலவை மிச்சப்படுத்தியது.
தொழில்நுட்பச் சாதனைகளாக ஜோ-பீட் மினி பேட்டில் நிகழ்வில் 16 மணிநேர நேரடி ஒளிபரப்பு, ஜோ-பீட் பிக் மேட்சில் தானியங்கி கிராபிக்ஸ் முறை, 2023 நீச்சல் போட்டியில் இலங்கையின் முதல் நீருக்கடியிலான நேரடி ஒளிபரப்பு, ‘தி பேப்பரே’ (ThePapare) தளத்தில் நேரடி ஒளிபரப்பு மற்றும் ட்ரோன் காட்சிகள் ஆகியவற்றை இம்மாணவர்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளனர்.
2026-ஆம் ஆண்டில் ஜோ-பீட் பிக் மேட்ச் (3.5 மில்லியன் பார்வைகள்), ரக்பி பருவம் (5 மில்லியன் பார்வைகள்) மற்றும் பீட்டரைட் கிரிக்கெட் லீக் (1.2 மில்லியன் பார்வைகள்) உட்பட நவம்பர் மாத நிலவரப்படி சுமார் 1.5 கோடி (15 மில்லியன்) பார்வைகளை ஈட்டியுள்ளதுடன், 19 நேரடி ஒளிபரப்புகள் என்ற சாதனை இலக்கையும் நெருங்கியுள்ளது.
இந்நிலையில், ஊடகத்துறை பொறுப்பாசிரியரான அருட்தந்தை அன்டன் சுதாரக வீரசிங்க, விடுமுறைக் காலத்திலும் அயராது உழைத்து கல்லூரியின் பெருமையை உலகறியச் செய்யும் மாணவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டியுள்ளார்.
“கடந்த காலம் நிகழ்காலத்திற்கு அழைத்து வருவதுடன், நிகழ்காலம் எதிர்காலத்திற்கான வழித்தடமாக அமைய வேண்டும்” எனக் குறிப்பிட்ட அவர், எதிர்கால ஊடகத் துறையில் முன்னோடிகளை உருவாக்கும் வல்லமை இந்த அலகிற்குக் கிடைக்க வேண்டுமென வாழ்த்தியுள்ளார்.
அதேபோல், கல்லூரியின் தமிழ் ஆசிரியர் சமூகத்தின் சார்பாகப் பாராட்டுத் தெரிவித்துள்ள திருமதி ஜூடி ரமேஷ்குமார், இன்றைய மாணவர்களின் டிஜிட்டல் ஆர்வத்தை இனம் கண்டு, நிகழ்வுகளைப் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் நேரலைகளாகத் தரமான முறையில் வழங்கி வரும் ஊடகப் பிரிவின் செயல்திறன் மிக்க சேவைக்கு மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
கல்லூரி அதிபர் அருட்தந்தை ரோஹித ரொட்ரிகோ, பொறுப்பாசிரியர் திருமதி. சுசித்ரா அல்போன்சு, முன்னாள் தலைவர்கள் (தரீன் ஜயதேவ, தினெல் சில்வா, சிமல்க லெனோரா, ஷவீன் மெண்டிஸ், நரேன் அபேகூன்) மற்றும் வழிகாட்டி சமீர பீரிஸ் ஆகியோரின் ஆதரவுடன் வளர்ந்துள்ள இப்பிரிவு, 2025/26 ஆண்டில் தலைவர் ஸ்டீவ் கென்னத் டயஸ், உப தலைவர் பிரதிவ் அஜித்குமார், செயலாளர் செனித யென்சித் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினரின் தலைமையில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

