பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை புதுப்பிப்பு!
தற்போது நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியில், மண்சரிவு அபாய எச்சரிக்கைகளைப் புதுப்பிப்பதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், இன்று (24) முற்பகல் 6.00 மணி முதல் நாளை முற்பகல் 6.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்த எச்சரிக்கைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல, ருவான்வெல்ல, யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, குருவிட்ட, எஹலியகொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் ‘கவனமாக இருக்குமாறு’ அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க, பாதுக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பிரதேச செயலகப் பிரிவுக்கும், களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, புலத்சிங்கள, ஹொரண, பாலிந்தநுவர, மத்துகம, அகலவத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்கும் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுள்ள, கிரியெல்ல, எலபாத, கலவானை, நிவித்திகல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் ‘விழிப்புடன் இருக்குமாறு’ அறிவித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

