நுவரெலியாவில் 18 பயனாளிகளுக்கு தலா ரூ.2.5 இலட்சம் பெறுமதியான விவசாய உபகரணங்கள்

நுவரெலியாவில் 18 பயனாளிகளுக்கு தலா ரூ.2.5 இலட்சம் பெறுமதியான விவசாய உபகரணங்கள்

நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அதிசய மண்டபத்தில் இன்று காலை 9.30 மணியளவில், நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் அவர்களின் ஏற்பாட்டில், உலக உணவுத் திட்டத்தின் (WFP) அனுசரணையுடன் விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, தெரிவுசெய்யப்பட்ட 18 பயனாளிகளுக்கு தலா ரூ.2 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நீர்த்தாங்கிகள், மருந்து தெளிப்பான்கள் உள்ளிட்ட விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான பல்வேறு உபகரணங்கள் இந்த உதவித்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னில, அமைச்சின் செயலாளர், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான மஞ்சுள சுரவீர ஆராச்சி, பிரதி கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன, உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் பிலிப் வோட் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பாடசாலை மாணவர்களின் போஷாக்கை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் வீட்டுத்தோட்ட பாடசாலை போஷணை வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில், உள்ளூர் விவசாயிகளின் உற்பத்தித் திறனை அதிகரித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை உபகரணங்களை வழங்குவதன் மூலம், உள்ளூர் மட்டத்தில் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதுடன், பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சத்தான உணவுப் பொருட்களை தொடர்ச்சியாக வழங்குவதற்கும் இந்த வேலைத்திட்டம் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

manel