நாட்டை மீளக் கட்டியெழுப்ப நீண்டகால வலுவான நிதியம்
அனர்த்த நிலைமைக்குப் பிறகு சேதமடைந்த நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தில் நிதி திரட்டுவதற்காக அரச மற்றும் தனியார் துறைகளை இணைத்து மத்தியதர மற்றும் நீண்ட கால வேலைத்திட்டமொன்றைத் தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, அனைவரின் பங்களிப்புடன் கூடிய நிதியமொன்றை நிறுவவும், நிதியத்தை முகாமைத்துவம் செய்ய அமைச்சரவை அங்கீகாரத்துடன் கூடிய அரச மற்றும் தனியார் துறைகளைக் கொண்ட கூட்டு முகாமைத்துவக் குழுவை நியமிக்கவும் எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
நேற்று (30) இரவு ஜனாதிபதி அலுலகத்தில் தனியார் துறை முதலீட்டாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மேலோட்டமாகத் தெரிவதை விட, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் நாடு அதிக அழிவைச் சந்தித்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, திறைசேரியின் நிதிகளால் மாத்திரம் அந்த சேதத்திற்கு முகங்கொடுக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
இதற்காக பல வழிகளில் நிதி திரட்ட முடியும் என்று இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், சர்வதேச அமைப்புகள் மற்றும் வர்த்தக சங்கங்களிலிருந்தும் அதற்கான நிதியை திரட்ட முடியும் என்றும் இந்தப் பணிகள் நியமிக்கப்படும் குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

