டித்வா புயலால் 29,000க்கும் மேற்பட்ட வணிகங்கள் பாதிப்பு!
டித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள, தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள ஏற்றுமதி உற்பத்தித் தொழிற்சாலைகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கை 29,649 எனகைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட உற்பத்தித் தொழிற்சாலைகள் உள்ளிட்ட வர்த்தகர்களை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் கடந்த (16) ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட தரவு சேகரிப்பு முறைமையின் ஊடாக இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
பதிவு செய்யப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களில், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சில் பதிவு செய்துள்ள 9,628 ஏற்றுமதி மற்றும் உற்பத்தித் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்து, துரித கடன் வசதிகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அந்தத் தொழிலாளர்களுக்கு 2 இலட்சம் ரூபா கடன் மானியம் மற்றும் 3 சதவீத (3%) வட்டி விகிதத்தின் கீழ் பல கடன் திட்டங்களை அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்றுமதி உற்பத்தித் தொழிற்சாலைகளை நடத்தும் தொழில்முயற்சியாளர்களுக்காக, எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் 3 அரச வங்கிகள் ஊடாக துரித கடன் திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தனியார் வங்கிகள் ஊடாகவும் இந்தத் திட்டத்தை முன்னெடுக்க இலங்கை மத்திய வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
தொழில் அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள ஏனைய 20,223 உற்பத்தி மற்றும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில், அவற்றுடன் தொடர்புடைய ஏனைய அமைச்சுக்களுக்குப் பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
புத்தளம், கம்பஹா, கொழும்பு, கண்டி, கேகாலை, குருநாகல், திருகோணமலை, பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள உற்பத்தித் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்களே அதிகளவில் பாதிப்படைந்துள்ளன.
பாதிக்கப்பட்டவர்களின் பதிவுகளின்படி, 861 பாரிய அளவிலான ஏற்றுமதி உற்பத்தித் தொழிற்சாலைகளும், 8,664 நடுத்தர அளவிலான தொழிற்சாலைகளும், 12,300 சிறிய அளவிலான மற்றும் 9,844 சிறு அளவிலான வர்த்தக நிலையங்களும் சேதமடைந்துள்ளதாகத் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

