களுபோவில வைத்தியசாலையில் நாளை புதிய கேத் லேப் பிரிவு திறப்பு
தெற்கு கொழும்பு போதனா மருத்துவமனையில் (களுபோவில) புதிதாக நிறுவப்பட்ட இதய வடிகுழாய்ச் சிகிச்சை ஆய்வகப் பிரிவு (Cardiac Catheterization Laboratory) உள்ளிட்ட அதிநவீன நோயாளி பராமரிப்பு வசதிகள் பல நாளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட உள்ளன.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்தத் திறப்பு விழா நடைபெறவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது, இதய வடிகுழாய்ச் சிகிச்சை ஆய்வகப் பிரிவு, டிஜிட்டல் ஆஞ்சியோகிராபி பிரிவு மற்றும் சிறுநீரக மற்றும் சிறுநீர்ப்பை கற்களை உடைக்கும் லித்தோட்ரிப்ஸி (Lithotripsy) பிரிவு ஆகியன மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட உள்ளன.
நாட்டின் இருதயம் மற்றும் இரத்த நாள நோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில், இந்த வாரத்திற்குள் அரசாங்க வைத்தியசாலை அமைப்பில் 04 புதிய கேத் லேப் (Cath Lab) பிரிவுகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கேத் லேப் பிரிவு கடந்த 27ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டதுடன், களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலை பிரிவுக்கு மேலதிகமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரண்டு கேத் லேப் பிரிவுகளும் நோயாளி சிகிச்சைகளுக்காக இணைக்கப்படவுள்ளன.
நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட இந்த கேத் லேப் அமைப்புகள், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான நிகழ்நேர இமேஜிங் (Real-time imaging) வசதிகளை உள்ளடக்கியுள்ளதுடன், கதிர்வீச்சு அளவைக் குறைத்து உயர்தரப் படங்களைப் பெறும் திறனைக் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறுகிறது.
இந்த வசதிகள் மூலம் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை சேவைகளை வினைத்திறனாக்கி, நோயாளர்களின் காத்திருப்புப் பட்டியலைக் குறைக்கவும், அதிவேகமான மற்றும் துல்லியமான சிகிச்சைகளை வழங்கவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

