களனி, மகாவலி, அத்தனகலு ஓயா குறித்த தீவிர எச்சரிக்கை

களனி, மகாவலி, அத்தனகலு ஓயா குறித்த தீவிர எச்சரிக்கை

களனி ஆற்றை அண்டிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் ஆய்வியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், கொழும்புக்கு அண்மித்த தாழ்வான பகுதிகள் மற்றும் களனி, பியகம போன்ற பல பிரதேச மக்கள் தொடர்ந்து மிக அவதானமாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது: 

“தற்போது ஹன்வெல்ல பிரதேசத்தில் நீர்மட்டம் 10.8 வரை உச்சத்தை எட்டியுள்ளது. எமது அவதானிப்பின்படி அநேகமாக 10.88 என்பது ஹன்வெல்ல நீர்மட்டத்தின் உச்ச மதிப்பாக இருக்கக்கூடும். 

நாகலகம் வீதியின் நீர்மட்டம் கிட்டத்தட்ட 7 அடி வரை உயர்ந்துள்ளது. 

களனி ஆற்றின் மேலிருந்து கீழ் நோக்கி நீர் வரும்போது, ஹன்வெல்லவில் நீர்மட்டம் உச்சத்தை அடைவதுடன், இடைப்பட்ட பகுதிகளில் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கலாம். 

இதனால் கொழும்புக்கு அண்மித்த பகுதிகளிலும், களனி, பியகம போன்ற பல பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. எனவே, அப்பகுதிகளில் உள்ளவர்கள் தொடர்ந்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” 

“துனுமலே நீர்மானியில் நீர்மட்டம் தொடர்ந்தும் ‘பெரும் வெள்ள’ நிலையில் உள்ளது. 

இதனால் அதற்குத் தாழ்வான பகுதிகளான கம்பஹா, ஜா-எல, வத்தளை, கந்தானை போன்ற பகுதிகளில் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கலாம். எனவே இப்பகுதி மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.” 

மகா ஓயா நீர்த்தேக்கத்தின் வெள்ள நிலைமை இன்னும் ‘அதி தீவிர வெள்ள’ நிலையிலேயே உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

மாவிலாறு அணைக்கட்டு உடையும் அபாயம் குறித்து செய்திகள் வெளியாகின. எனினும், நீர்மட்டம் மிக அதிகமாக இருப்பதால் அந்த இடத்திற்குச் சென்று அதனைப் பரிசோதிக்க முடியாத நிலை காணப்படுகிறது. 

அணை உடைந்தாலும் இல்லாவிட்டாலும் தற்போது மாவிலாறு, கின்னியா, மூதூர், சூரியபுர போன்ற பகுதிகளில் வெள்ளம் பரவியுள்ளதுடன், நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே திருகோணமலை வரை உள்ள கீழ் பகுதிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். 

எஸ். ரஜீவன்