ஒலுவிலில் கைவிடப்பட்ட சிசுவின் பெற்றோர் கைது
ஒலுவிலில் கைவிடப்பட்ட சிசுவின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களேயான பெண் சிசுவொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் நேற்று (30) குழந்தையின் தந்தை மற்றும் தாய் ஆகியோரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் 17 வயதான திருமணமாகாத காதல் ஜோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தந்தையின் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தமையால் சிசுவை கைவிட தீர்மானித்ததாக தெரிய வந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை குழந்தையின் தாய் வீட்டிலேயே குழந்தையை பிரசவித்துள்ளார்.
இதனை அறிந்த தந்தை, சிசுவை தான் வளர்ப்பதாக கூறி பெற்றுக்கொண்டார்.
பின்னர், அவர் தனது உறவுக்கார பெண்ணை தொடர்பு கொண்டு, ஒலுவில் பகுதியில் கைவிடப்பட்ட சிசுவொன்றை தான் கண்டெடுத்தாகவும் அதனை வளர்க்க முடியுமா எனவும் கேட்டுள்ளார்.
குறித்த பெண்ணும் அதற்குச் சம்மதித்ததையடுத்து, சிசுவின் தொப்புள்கொடி முறையாக வெட்டப்படாததால் அதிலிருந்து இரத்தம் கசிந்துள்ளது.
இதையடுத்து, ஒலுவில் வைத்தியசாலைக்கு சிசு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதன்போது குழந்தை கைவிடப்பட்டதாக கதை பரவியது.
இந்நிலையில் குழந்தையின் தாய் மற்றும் தந்தையை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்ததோடு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

