அமைச்சர் சரோஜா போல்ராஜ் பெயரில்பரவும் போலிச் செய்தி

அமைச்சர் சரோஜா போல்ராஜ் பெயரில்பரவும் போலிச் செய்தி

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கூறியதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும், அதில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு உத்தியோகபூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

“திருமணம் செய்யாமலேயே குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும், குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில் தாய் மற்றும் தந்தையின் பெயர்கள் தேவையில்லை எனப் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும்” அமைச்சர் கூறியதாகச் சில போலிச் செய்திகள் இணையத்தில் பரப்பப்பட்டு வந்த நிலையிலேயே அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமைச்சர் இவ்வாறான எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை எனவும், இதுபோன்ற சட்டத் திருத்தங்கள் எதுவும் கொண்டுவரப்படவில்லை எனவும் அமைச்சு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இத்தகைய அடிப்படை ஆதாரமற்ற மற்றும் தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், பகிர்வதைத் தவிர்க்குமாறும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

அமைச்சரையும் அமைச்சின் கௌரவத்தையும் சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டுப் போலிச் செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

manel