அனுபவங்கள்தான் மனிதர்களைப் பக்குவப்படுத்தும்: பாயல்

அனுபவங்கள்தான் மனிதர்களைப் பக்குவப்படுத்தும்: பாயல்

குமார சம்பவம்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு கிடைத்த புது நாயகி பாயல் ராதாகிருஷ்ணா.

ஏற்கெனவே தெலுங்கில் சில படங்களில் நடித்து முடித்திருப்பவர், தமிழில் சாதிக்கும் ஆசையுடன் கோடம்பாக்கத்துக்கு வந்துள்ளார்.

பாயலுக்குச் சொந்த ஊர் மங்களூர். இவரது குடும்பத்துக்கும் சினிமாவுக்கும் ரொம்ப தூரமாம். ஆனாலும் அத்துறை மீதான ஆர்வத்தால் நடிக்கத் தொடங்கியதாக கூறுகிறார்.

நயன்தாராதான் தனது முன்மாதிரி என்கிறார் பாயல். திரிஷாவையும் மிகவும் பிடிக்கும் என்கிறார்.

“நயன்தாரா தன்னம்பிக்கை நிறைந்தவர். மிகச் சிறந்த நடிகையும்கூட. அதனால்தான் தனது திறமையால் திரையுலகில் வெற்றிநடை போட்டு வருகிறார். திரிஷாவும் அப்படிப்பட்ட நடிகைதான். இருவரையும் பார்த்து பலமுறை வியந்திருக்கிறேன்.

“நான் சிறிய நாயகன், நட்சத்திர நாயகன் என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பதில்லை. எல்லா கதாநாயகர்களுடனும் நடிக்கவே விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை எனக்கான கதாபாத்திரம் நன்றாக இருக்க வேண்டும், அவ்வளவுதான்.

எனவே எல்லா மொழிகளிலும் நடிப்பதும் எல்லா கதாநாயகர்களுடனும் நடிப்பதுதான் எனது இலக்கு. அப்போதுதான் நிறைய அனுபவங்களைப் பெற முடியும். அனுபவங்கள்தான் மனிதர்களைப் பக்குவப்படுத்தும்,” என்று சொல்லும் பாயலுக்கு, செல்லப் பிராணிகள் என்றால் கொள்ளைப் பிரியமாம்.

இவரது குடும்பத்தார் மங்களூரில் உள்ள சொந்த எஸ்டேட்டில் பசு மாடுகளையும் நிறைய பறவைகளையும் வளர்க்கிறார்கள். படப்பிடிப்பு இல்லாத நாள்களில் பாயலை அங்குதான் பார்க்க முடியும்.

எஸ். ரஜீவன்